நவ. 20
இன்றைய இளைஞர்களே!.. சாலைவிதிகளை மதித்து, விபத்தில்லா வாகனப் பயணமே!!.. நமது உயிர்பாதுக்காப்பின் உன்னதமான செயல்!!!.. எனப் பறைசாற்றுகிறார் திருப்பூர் மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் சி.சிவானந்தம்.
இன்றைய இளைஞர்கள் வீட்டில் பெரியோர்கள் பயன்படுத்தும் வாகனங்களை தேவைக்காக இயக்குவது இன்று எளிதாக பார்க்கமுடிகிறது. பதினெட்டு வயது பூர்த்தி அடையாத, ஓட்டுநர் உரிமம் இல்லாத குழந்தைகளை சில பெற்றோர்களே அவசர தேவைக்காக வாகனத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது வேடிக்கையான விந்தையாக உள்ளது. பதினெட்டு வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு உடலாலும், உள்ளத்தாலும் திறமில்லாதவர்களாக இருப்பார்கள், சில நேரம் செய்வதறியாது திகைத்து விபத்துக்குள்ளாவார்கள்.
இளைஞர்களே!.. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மற்ற விலங்கினங்கள் போல், விடுபட முடியாமல் உள்ள இயற்கையின் தூண்டுதல்களில் நீங்கள் சிக்கவில்லை. உங்களுக்கு உடலை வளர்த்து வாழ்வதற்கான சில நியதிகள் உண்டு. ஆனாலும் அவற்றை தாண்டி பிற நிலைகளைப் பெறவும் வளமான வாய்ப்புகள் உண்டு, அந்த நிலைகளைப்பெற பதினெட்டு வயது பூர்த்தியடைய வேண்டும். அந்த காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
”அவசரம் காட்டினால்! ஆபத்தில் முடியும்”.
எதற்கும் காலமும் நேரமும் தேவைப்படுகிறது காத்திருந்தது வென்றிட வேண்டும்.
அறிவை விரிவுச்செய்யவும், அகண்டமாக்கவும், அகண்ட பார்வையுடனே பள்ளி, கல்லூரிக்கு சென்று கல்விக்கற்று உயர்ந்த நிலையை அடையவேண்டும். வாழ்க்கையில் இலக்கு இன்றியமையாதது. அதோடு நாம் செல்லும் சாலை பாதுகாப்பும் இன்றியமையாதது தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நாம் போகுமிடம் தான் முக்கியமே தவிர, போகும் வேகம் அல்ல, பள்ளி, கல்லூரியின் நேரத்தை கணக்கிட்டு அதற்கு முன்னரே புறப்பட்டுச் சென்றால், நேர அழுத்தத்திற்கும், சாலை நெரிசலிருந்தும் மீண்டு சரியான நேரத்திற்கு சென்றுவிடலாம், ஓட்டுநர்களும் அவசரம் காட்டாமல் குறித்த நேரத்தில் குறித்தப்படி சென்று தன் இலக்கை அடையலாம்.
இன்றைய இருசக்கர வாகன விபத்துக்களுக்குப் போதை பழக்கமே காரணமாக உள்ளது.
1.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது.
2.சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது.
3.கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது.
4.அதி வேகமாக வாகனம் ஓட்டுவது.
5.முறையற்ற வாகன ஓட்டுநர் பயிற்சி.
6.நிறுத்தமில்லா தொலைதூரம் வாகனம் ஓட்டுவது.
7.கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது.
8.சிறுவர்கள்,சிறுமிகள் வாகனம் ஓட்டுவது.
இதனால் சாலை விபத்துக்கள் நடக்கிறது இதற்கு காரணம் நாம தான், தானும் விபத்துக்குள்ளாகி, பிறரையும் விபத்துக்கு உள்ளாக்குவதேனோ?.
காவல்துறை தன் கடமையை செய்யும்.
அவர்கள் விதிக்கப்படும் அபராத தொகைக்கும், அச்சுறுத்தலுக்கும், அவர்களின் கெடுபிடிக்கு பயந்தோ!. அணிவது ”தலைகவசம்”,அல்ல
”தலைக்கவசம், உயிர்க்கவசம்”,
தன்னையும் தன் குடும்பத்தையும், இந்த சமுதாயத்திற்காகவும் தான், என்பதை ஒவ்வொரு நொடிபொழுதும் தன் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.
அறிவார்ந்த மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களே. சாலை விதிகளை கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும் இந்த நாட்டிற்கும் நன்மை பயக்கும்.
இன்றைய காலத்தில், பெரும்பாலான நகரங்களில் வாகனப்பெருக்கம், சாலைகளில் நெரிசல், பராமரிக்கப்படாத சாலைகள், குறுக்கலான சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளிலும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுதல், இப்படி நாளுக்கு நாள் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி இறப்போரில் 69% விழுக்காடு 18 வயது முதல் 45 வயது வரை ஆனவர்களே என ஆய்வறிக்கை விளம்புகிறது. இதைத்தவிர்க்க மிதமான வேகம் 40 லிருந்து 50 கிலோமீட்டர் வேகமே மிதமான வேகத்தில் பயணித்தால் கண்டிப்பாக சாலை விபத்து ஏற்படாது.
விபத்தில்லா வாகனப் பயணம்:-
1.சாலை விதிகளுக்கு உட்பட்டு் வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்து ஏற்படாது.
2.ஓட்டுநர் வாகனத்தை சாலையின் இடதுபுறத்தில் ஓட்டுவதுடன் எதிர்வரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம்தர வேண்டும்.
3.மூன்று பக்கம்,நான்கு பக்கம் சந்திப்பு சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அந்த இடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதிசெய்த பிறகே வாகனம் அவ்விடத்தைவிட்டு கடந்து செல்ல வேண்டும்.
4.சாலையில் உள்ள சந்திப்பில் நுழையும்போது அந்த சாலையில் ஏற்கனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும்.
5.தீயணைப்பு வாகனம், 108,போன்ற அவசரசிகிச்சை வாகனம் ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுத்து அந்த வாகனம் தடையில்லாமல் செல்வதற்கு வழிவிட வேண்டும்.
6.எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் வாகன எச்சரிக்கை விளக்குகளை அதாவது சிவப்பு விளக்கை போட்டு வாகனத்தை ஓட்டுவது நலம் பயக்கும்.
7.மலைச்சாலைகளில், மிகவும் சரிவான சாலைப் போன்றவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல முதலிடம் தரவேண்டும்.
இன்றே உறுதி எடுத்துக் கொள்ளுங்கள், ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் உரிமம், காப்பீட்டு திட்டம் உரிமம், புகை பரிசோதனை, தலைக்கவசம், என அனைத்தும் பெற்று மிதமான வேகத்தில் மிதந்து பயணித்து பலகாலம் பண்போடு, நினைத்ததை சாதித்து நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.
சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான, முத்தமிழறிஞர் டாக்டர் சி. சிவானந்தம்.