நாகர்கோவில் ஜன 18
18 வயது இளையோர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதியளிக்கும் பெற்றோர்களுக்கு நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் உத்தரவுப்படி நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையின் மூலம், மாநகர் பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரப் படுத்தப்பட உள்ளது.
அதன் ஒருபகுதியாக, 18 வயது நிரம்பாத இளையோர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 199A ன் படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
199A சட்டப் பிரிவின் படி, பெற்றோர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும்.
இளையோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருட காலத்திற்கு ரத்து செய்யப்படும்.
இளையோர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதிக்கப்படாது.
ஏற்கனவே, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டி வரும் நபர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கூறிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது. என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.