நாகர்கோவில் மார்ச் 5
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளர் சதீஷ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எப்போதுமே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார். அந்த வகையில் இப்போது தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக இவரே கற்பனையான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
உண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அப்படி குறிப்பிடவே இல்லை. மீனவர்கள் பிரச்சனையில் அவர் மிகவும் உறுதியான நிலைப்பாட்டுடன், மீனவர்களை மீட்பதற்காக குரல் கொடுத்தும் வருகிறார். நிலைமை இப்படி இருக்க தன் அரசியல் சுய லாபத்திற்காக செல்வப் பெருந்தகை இப்படி பேசுவது வேடிக்கையாக உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் தரணி முருகேசன் இல்ல திருமண விழாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பும் நிகழ்த்தினார் அப்போது அவர் இலங்கையில் புதிய அதிபர் வந்த பின்பு தான் தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. மீனவர்கள் பிரச்னையில் சட்டம் ஒழுங்கு, எல்லை பிரச்சினையாக இதை அணுகாமல் மனிதாபிமான முறையில் அணுகுவதற்கு தான் இந்திய அரசு, இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது என்றுதான் நேர்காணல் கொடுத்திருந்தார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே நேரடியாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள் விடுதலை தொடர்பாக கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கடிதத்தில் இந்தியா இலங்கை கூட்டுப் பணி குழு விரைவில் கூடவும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படுவதை அதன் மூலம் தடுக்கவும் வலியுறுத்தியும் இருந்தார். இது எதுவுமே தெரியாத செல்வ பெருந்தகை வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுவதை இப்போதாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.
தமிழக மீனவர்கள் இன்று அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான். மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டது. இதையெல்லாம் உணர்ந்து செல்வப் பெருந்தகை இனி மேலாவது நாவடக்கத்துடன் பேச வேண்டும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.