ஊட்டி. பிப். 13.
நீலகிரி மாவட்டம் கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மூலம் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது் இந்நிலையில் தொழிலாளர் நல ஆணையர் உத்தரவின் பெயரில் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தலைமையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊட்டி, குன்னூர் மற்றும் பல பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அங்கு கொத்தடிமை குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் எங்கேனும் கொத்தடிமை முறை கண்டறியப்பட்டால் அவர்களை பணிக்கு அமர்த்தியவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கொத்தடிமை முறை பற்றிய புகார்கள் ஏதேனும் இருந்தால் அவசர உதவிக்கு மாவட்ட கலெக்டர், சப் கலெக்டர், ஆர்டிஓ, தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவைகளுக்கு விரைவான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.