திருவட்டாறு, ஜன-28
குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே சாய்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணிமகன் ஜெகதீஷ் (24). டிப்ளமோ பட்டதாரி. ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஷைனி (24) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் இந்த மாதம் 23ஆம் தேதி காலை ஜெகதீஷ் தனது மனைவியை அவரது வீட்டில் கொண்டு விட்டு விட்டு வேலைக்கு புறப்பட்டு செல்வதாக கூறியுள்ளார்.
மதியம் மற்றும் மாலையில் ஷைனி தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஜெகதீஷ் போன் எடுக்கவில்லை. இதனால் ஷைனி புறப்பட்டு கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஜெகதீஷ் வீட்டில் தரையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெகதீ சை மீட்டு சாமியார் மடம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சையாக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் நேற்று மாலை உயிரிழந்தார். புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.