மதுரை பிப்ரவரி 15,
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக சாதித்த மருத்துவ குழுவினர்
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் வெற்றிகரமாக சாதித்த மருத்துவ குழுவினருக்கு குவியும் பாராட்டு.
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பொதுமக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவ திட்டம், நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம் போன்ற திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டங்களாகவும், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டங்களாகவும் விளங்கி வருகிறது.
மேலும், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வு அளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னனி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகம் போற்றுதலுக்கு உரியது. இதனை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2023-ஆம் ஆண்டு இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், உடல் உறுப்புகளை தானம் செய்த அனைவரது உடலுக்கும் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் உடல் உறுப்பு தானக் கொள்கையை நிறைவேற்றும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. இதில், புதிய மைல் கல்லாக சென்னைக்கு அடுத்து, முதல் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு மருத்துவக் குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். மதுரை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த 31 வயதான மோகன்குமார் அவர்கள் தலையில் அடிபட்ட நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 5 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். மோகன் குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர். அவரிடமிருந்து சிறு நீரகங்கள், கல்லீரல், கரு விழிகள். எலும்பு, தோல், இதயம் ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சிறுசீரகம் 22 வயது நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இதையடுத்து, அவரிடமிருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மருத்துவமனையில் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 42 வயதான மற்றொரு நோயாளிக்குப் பொருத்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படையில், அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு காவலர் மோகன்குமாரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிறைவு செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்பு கல்லீரல் தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது. சென்னை ராஜிவ்காந்தி ஸ்டான்லி மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வெளியில் இருந்து மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்வர். முதன் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் இங்குள்ள மருத்துவர்களே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது சாதனையான விஷயம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எஸ்.பத்மநாபன், எஸ்.கார்த்திகேயன், ஏ.சாஸ்தா, ஆர். வில்லாளன், எஸ்.பால முரளி, குடல் மற்றும் இரைப்பை மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் எம்.கண்ணன், ரமணி, மயக்கவியல் மருத்துவர்கள் கல்யாண சுந்தரம். வைரவராஜன், சண்முகசுந்தரம், செந்தில்குமார், பாலமுருகன், ரமேஷ், பிரமோத், முரளி, ரத்த வங்கி மருத்துவர் சிந்தா, செவிலியர்கள் ஜோதி. விஜயலட்சுமி மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் குமரவேலு, நிலைய மருத்துவ அலுவலர்கள் சரவணன், முரளிதரன் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தொகுப்பு
இசாலி தளபதி எம்.ஏ.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை.
ம.கயிலைச் செல்வம், பி.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி).