திங்கள் சந்தை, பிப்- 16
இரணியல் அருகே உள்ள திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல வாரிய விடுதியில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மகள் பெபினா (20) என்பவர் தங்கி இருந்தார். இவர் அந்த பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவ தினம் பெபினா தனது தந்தையின் செல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினார். அதில் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரது வீட்டில் பிரச்சினையாக இருப்பதால் அவருடன் செல்கிறேன் என்று கூறி இருந்தார். இதை அடுத்து முருகன் இரணியல் வந்து மகளை தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியை சார்ந்த மினி பஸ் டிரைவருடன் பெபினாவுக்கு காதல் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. போலீசார் மினி பஸ் டிரைவரை தேடிய நிலையில் அவரும் தலைமறைவாகியுள்ளார். இருவரையும் மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.