நாகர்கோவில் – டிச – 22,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மறவன்குடியிறுப்பு ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள புனித அல்போன்சா பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி தேர்வு நடைபெறும் அறைக்கு துண்டு விடைத்தாள்கள் கையில் மறைத்து வைத்து தேர்வு எழுதியதாக கூறி ஆசிரியை மிரட்டியதால் வகுப்பறை கட்டிடத்தின் இரண்டாம் தளத்திலிருந்து குதித்து படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் பள்ளியான புனித அல்போன்சா பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அதை ஒட்டி பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தேர்வில் துண்டு சீட்டில் கேள்விக்கான பதில்களை குறித்து மறைத்து வைத்து தேர்வு எழுதியதாகவும், தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது தேர்வு மையத்தில் பணியிலிருந்த ஆசிரியை அவரை கண்டித்தாகவும் கூறப்படுகிறது. தன்னுடன் பயிலும் சக மாணவிகள் மத்தியில் ஆசிரியை திட்டியதால் மன வேதனையடைந்த மாணவி, திடீரென வகுப்பறையை விட்டு வெளியே சென்று கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியர்கள் ஓடிச் சென்று மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாகர்கோயிலில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தான் ஒன்பதாம் வகுப்பில் இப்பள்ளியில் மாணவி சேர்ந்த நிலையில் பாடங்களை படிப்பது தொடர்பாக ஆசிரியர்களின் அழுத்தத்தால் மாணவிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இச்செயலில் ஈடுபட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் காவல் ஆய்வாளர் இசக்கி துறை தலைமையில், துணை ஆய்வாளர் சதிஸ் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு உடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டதோடு மாணவியின் பெற்றோரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியை தன்னுடன் பயிலும் சக மாணவிகள் மத்தியில் ஆசிரியை திட்டியதால் மாடியில் இருந்து குதித்தாரா ? அல்லது தற்கொலை செய்யும் நோக்கில் தான் மாடியிலிருந்து குதித்தாரா ? வேறு ஏதேனும் காரணங்களால் மாணவி இந்த கொடூர முடிவு எடுத்துள்ளார் எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.