நாகர்கோவில் செப் 19
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் பொதுமக்கள் மாணவ மாணவியர் என அனைத்து தரப்பினரும் பங்கு பெற்று பயனடைய கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 14 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு அனைத்து வயதினரும் வரவேற்கப்படுகின்றனர். போட்டிக்கான கடிதத்தை, “எழுதுவதில் மகிழ்ச்சி: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்” “த ஜாய் ஆப் ரைட்டிங் : இம்போர்ட்டன்ஸ் ஆப் லெட்டர்ஸ் இன் எ டிஜிட்டல் ஏஜ் ” என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம் சென்னை – 600002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் (இலேண்ட் லெட்டர் கார்டு ) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (என்வளோப் ) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும். “01.01.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றவன் / நிறைவு பெறாதவன்” என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 25000/-, இரண்டாம் பரிசு ரூ. 10000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5000/- வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50000/-, இரண்டாம் பரிசு ரூ. 25000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10000/- வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இப்போட்டியில் பங்குபெற்று பயனடையுமாறு அந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.