தென்காசி மாவட்டம் தென்காசி இசக்கி மஹாலில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலும் ,தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய பழனி நாடார் முன்னிலையில் நடைபெற்றது.
தென்காசி நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் கூட்டத்தின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை
பேசியதாவது
காங்கிரஸ் கட்சி சித்தாந்தம், கொள்கை உள்ள கட்சி. காங்கிரஸ் கட்சி எதிர்வரும் காலத்தில் இருக்காது எனக் கூறிய பிரதமர் மோடியிடம் தற்போது எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் அவர் உள்ளார்.
கூட்டணி கட்சியினர் சரியாக வழிநடத்துவதில்லை என்று சிலர் கருத்து கூறுகிறார்கள். இந்த நிலைமை வருவதற்கு காரணம் யார்? காங்கிரஸ் கோட்டையாக இருந்த சட்டமன்றங்கள் நம் கைவிட்டு போனதற்கு காரணம் என்ன? என்பதை நாம் ஆலோசனை செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸில் 50 விழுக்காடு இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நாட்டை அபகரிக்க பாசிச வாதிகள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அதனை தடுக்க நாம் வலுப்பெற வேண்டும்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாகவும், தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசு மீண்டும் தமிழகத்தை முழுமையாக புறக்கணித்துள்ள செயல் மிகவும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.
மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் எனவும் இருந்தபோதும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் நெல்லை முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் தமிழக காவல்துறை குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.