மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட துணை செயலாளர் கோகிலா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோமல்கிட்டு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஏழை-எளிய மக்கள், குறு, சிறு தொழில்கள் பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பால் மற்றும் பால் பொருட்களின் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலை, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு, முத்திரைத்தாள் கட்டணம், சாலை வரி உள்ளிட்ட வரி உயர்வை உடனே குறைக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி நகர செயலாளர் அருண்பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் தங்கராசு, ராமகிருஷ்ணன், சண்முகம், மாதவன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராகுல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராதா நன்றி கூறினார்.