மார்த்தாண்டம், ஏப்- 9
களியக்காவிளை அருகே குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் (42)என்பவரும் மதுரையில் உள்ள சட்டக் கல்லூரியில் ஒன்றாக படித்த போது காதல் ஏற்பட்டு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சரண்யா குழித்துறை நீதிமன்றத்தில் பணிபுரிவதால் அங்கேயே வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி வருகிறார். ரஞ்சித் குமார் சட்டக்கல்லூரி படிப்பை முடித்து விட்டாலும் அவர் சொந்த ஊரான தூத்துக்குடியில் வழக்கு ஒன்றில் சிக்கியதால் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் அவர் மதுவுக்கு அடிமையாகி கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சரண்யா பிள்ளைகளுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் யாரோ ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து சரண்யா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், யார் தட்டுகிறார்கள்? என்று பயந்து போன சரண்யா கதவை திறக்கவில்லை.
நேற்று காலை சரண்யா எழுந்து தனது வீட்டு கதவை திறந்து பார்த்தபோது கணவர் ரஞ்சித் குமார் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அலறினார். களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் கதவை தட்டி பார்த்த ரஞ்சித் குமார் மனைவி கோபத்தில் கதவை திறக்கவில்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.