அரியலூர், அக்;06
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி
துவக்கி வைத்து, 04 மாற்றுத்திறனாளிகள் உட்பட 128 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
04 மாற்றுத்திறனாளிகள் உட்பட 128 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது;
உழைப்பு இருந்தால் உயர்ந்த நிலைகளை அடைய முடியும். விடாமுயற்சி, கடின உழைப்பு, ஆர்வம் இவை மூன்றும் இருந்தால் திறன் தானாகவே வளரும். நிறுவனங்களில் பணிபுரியும் போது அந்நிறுவனத்தின் நிலை உயர்வதற்கு உழைத்தால் வாழ்க்கை தரமும் உயரும். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பணிபுரிவதற்கு இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும். உலகமயமாக்கல் பின்பு முன்னேறி மாவட்டமாக இருந்தாலும், பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும் வேலை கிடைக்கும் இடங்களுக்கு சென்று பணியாற்றினால்தான் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். படித்து முடித்தவுடன் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான துறையில் தனித்திறனை வெளிபடுத்த வேண்டும். அதன் மூலம் உங்களது பெற்றோர்களுக்கு வாழ்வில் வளமான நிலையை ஏற்படுத்த வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பு பெறுவதற்கான முதல்நிலை என்பது மிகவும் சவாலானதாகும். அந்த வாய்ப்பை தமிழ்நாடு அரசு இத்தகைய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஏற்படுத்தி தருகிறது. எனவே இவ்வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இம்முகாமில் டாடா ரீடெய்ல் சேல்ஸ், டாடா கேபிடல் இண்டியா, டி.வி.எஸ், ஹ_ண்டாய், எம்.ஆர்.எப் நிறுவனம், ஆதித்யா பிர்லா நிறுவனம், ரானே நிறுவனம், எஸ்.ஜி.எஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டன. இன்றைய முகாமில் 2014-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 04 மாற்றுத்திறனாளி நபர்கள் உட்பட 128 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும், 130 நபர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 8 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 968 நபர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
18 வயது முதல் 45 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி) முடித்த வேலைநாடுநர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் நடத்தப்பட்டது. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பதிவுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சுயதொழில் உருவாக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தேசிய அளவிலான தனியார் வேலை இணையதள சேர்க்கை முகாம்களும், தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்களும் மற்றும் தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்பு இணையதள சேர்க்கை முகாம்களும் நடத்தப்பட்டது. கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறை வேலைவாய்ப்பு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை முகாமும் நடத்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டதுடன், அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், அரியலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு உதவியாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்