மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி, அ வல்லாளபட்டி, கிடாரிபட்டி, கோட்டை வாசல், தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து டங்ஸ்டன் தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து உரையாற்றினார். இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது-
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேளையிலும், டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட வேண்டும் என்ற நோக்கில் நேரடியாக பொதுமக்களை சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கி எடுத்துரைக்க எனக்கு உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் சார்ந்த அலுவலர்கள் உங்களது கிராமங்களுக்கு நேரடியாக வருகை தந்துள்ளோம். மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் திட்டம் அமைய உள்ளது என்ற செய்தியையடுத்து இப்பகுதி மக்கள் கடந்த மாதம் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் திட்டம் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றினார்கள். நானும் அந்த கூட்டத்தில் பங்கேற்றேன். அதனைத் தொடர்ந்து மேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நானும் பங்கேற்றேன். அப்போது விவசாயிகள் மற்றும் வணிகர்கள் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக இப்பகுதி மக்களின் உணர்வை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில், மதுரை மாவட்டம் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றி உள்ளார்கள். மேலும் தாம் முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் வரையில் தமிழகத்தில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கும் நிலை வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் துளி அளவும் அச்சப்படத் தேவையில்லை. அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு இப்பகுதியில் டங்ஸ்டன் திட்டத்திற்காக ஒரு பிடி மண்ணை கூட அள்ள அனுமதி தராது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பிமூர்த்தி தெரிவித்தார். மேலும் இக்கூட்டங்களில் பங்கேற்ற பொதுமக்கள் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் விளக்கமளித்து தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வின் போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தன் உட்பட பலர் உடன் இருந்தனர்.