அரியலூர், டிச.18
அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்திலுள்ள அய்யன் உடையான் ஏரி, பெருமாள் ரெட்டி ஏரி மற்றும் புது ஏரிகளின் கரைகளில், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2,000 பனை விதைகளை செவ்வாய்க்கிழமை நட்டனர்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் ஏரிகளில் பனை விதையை நட்டு வைத்து, தொடக்கி வைத்து பேசுகையில், பனை மரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது. பனை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் மக்களுக்கு பயன்படக்கூடியது. தமிழக அரசின் மரமான இந்த மரத்தை காவிரி நீர் படிப்பு பகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகமாக வளர்க்க வேண்டும் .
அவ்வாறு மரங்களை வளர்ப்பது அரசின் கடமை மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் மூலம் எங்கும் பனைகளை விதைக்க வேண்டும். இதன் பயன்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அதோடு புங்கன் மரமும் விதைக்கப்பட்டுள்ளது . இது அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. இந்த மரங்கள் வளர்ப்பு மூலம் இப்பகுதியில் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். மேலும் மண்ணின் உவர்ப்பு தன்மை விரைவில் மாறிவிடும் என்றார் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வனச்சரக அலுவலர் பழனிச்சாமி, வனவர் பாண்டியன், ஊராட்சித் தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் பழனியம்மாள், ஊராட்சி செயலர் பாண்டியன், மக்கள் நலப் பணியாளர் பழனிவேல், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன், ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளர்கள் மணிகண்டன், அபிராமி, பாலமுருகன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்