கோயம்புத்தூர், மார்ச் 4
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மயில் மார்க் சம்பா ரவை நிறுவனங்களின் பங்குதாரர்கள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மயில் மார்க் சம்பா ரவை நிறுவனங்களின் பங்குதாரர்கள் கூறியதாவது: கோவை ரங்கே கவுடர் வீதியில் 60 வருட பாரம்பரியமிக்க ஒரு நிறுவனமாக எங்களுடைய மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சம்பா ரவை என்பது தமிழக மக்களின் அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில், எங்கள் மயில் மார்க் சம்பா ரவையின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மயில் மார்க் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்புகார்களை நாங்கள் அளித்து வருகிறோம். மயில் மார்க் சம்பா ரவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என ஒரு பொய்யான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த ரவிகாந்த் என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் மயில் மார்க் சம்பா ரவை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சம்பா ரவை தயாரிப்புகளை உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் மயில் மார்க் சம்பா ரவையில் எந்தவிதமான வேதிப்பொருள் பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனை அறிக்கை வந்தது. இந்த அறிக்கையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், பொய்யான வழக்கை தாக்கல் செய்த ரவிகாந்த் என்பவனின் முகவரிக்கு விசாரணைக்கு நேரில் வருமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ரவிகாந்த் நேரில் ஆஜராகவில்லை. கடந்த மாதம் 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் மீது போடப்பட்ட பொய்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதில், மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்டது. ஒரு புனையப்பட்ட பொய்வழக்கு என்றும், நீதிபதி கூறினார். மேலும், வழக்கு தாக்கல் செய்த ரவிகாந்த் ஒரு தனியார் ஆய்வக அதிகாரியிடம் மிரட்டி பொய்யான மதிப்பீட்டை பெற்று அதை கோர்ட்டில் தாக்கல் செய்துஉள்ளார். இதற்கு பின்புலமாக கோவையில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளார் என்பது நாங்கள் பெற்ற தகவல்படி தெரியவந்தது. மேலும், மயில் மார்க் சம்பா ரவை குறித்து கடந்த மாதத்தில் அவதூறு வீடியோவை வாட்ஸ்அப்பில் சிலர் பரப்பினர், இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம். இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கடந்த 22ம் தேதி ரவிகாந்த்திற்கு கோவை கடை வீதி போலீசாரும், கோவை மாநகர சைபர்கிரைம் போலீசாரும் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், ரவிகாந்த் நேரில் வந்துவிட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்றார். இதிலிருந்து அவதூறு வீடியோவை பரவவிட்டது ரவிகாந்த் என்பது தெளிவாக தெரிகிறது. இவரது பின்புலமாக செயல் பட்டவர் யார்? என்பது விரைவில் வெளிவந்துவிடும். ரவிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.