நாகர்கோவில் நவ 21
நாகர்கோவில், ஒழுகினசேரியில் இன்று நடைபெற உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க-வின் கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ, மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அ.அருணாசலம் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். இக்கூட்டத்தில் அ.தி.மு.க கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்குமாறு கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அகியோரின் நல்லாசியுடன், கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் கழகத்தின் அனைத்து நிலை அமைப்புகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேரடியாக கள ஆய்வு செய்து இப்பணிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளை பெறுதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் சென்றடைந்து விட்டதா என்பதை உறுதி செய்வது குறித்தும், கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்புடன் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி வார்டு கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக தொழிற்சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.