நாகர்கோவில் மே 31
கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி இந்திய கடற்படையின் அதி உச்சமான கமாண்டோ படையான மார்க்கோஸ் படை வீரர்கள் – முதலை வீரர்கள் 30 பேர் பாதுகாப்புடன் தியானம் மேற்கொள்ள இருக்கிறார்.லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஓய்வடைந்த நிலையில் லோக்சபா தேர்தல் அனைத்து கட்ட வாக்குப் பதிவுகளும் நிறைவடைந்து ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாடுக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் மொத்தம் 45 மணிநேரம் தவமிருக்கிறார். விவேகானந்தர் தவமிருந்ததைப் போல தியானம் மேற்கொள்கிறார் மோடி. அமித்ஷா மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆலய தரிசனம் மேற்கொள்கிறார்.பிரதமர் மோடி, கன்னியாகுமரி நடுக்கடலில் தியானம் மேற்கொள்ளும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு போலீசாரைப் பொறுத்தவரையில் இது முதல் அனுவபமாக இருக்கிறது. பொதுவாக டெல்லியில் இருந்து வரும் தலைவர்கள் சென்னை, மதுரை, ஊட்டி என பல இடங்களில் தங்குவது வழக்கம். ஆனால் முக்கிய தலைவர் ஒருவர் 3 நாட்கள் நடுக்கடலில் தவம் அல்லது தியானம் மேற்கொள்வதும் அவருக்கு நடுக்கடலில் பாதுகாப்பு தருவது என்பதும் தமிழ்நாடு போலீசாருக்கு முதல் அனுபவமாகவே இருக்கிறது. இதனால் தரை, வான் மற்றும் கடற்பரப்பு என 3 பகுதிகளிலுமே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.இதனிடையே பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்களும் கன்னியாகுமரி வருகை தந்துள்ளனர் . அதென்ன மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்கள் என்கிறீர்களா? இந்திய கடற்படையின் “Marine Commandos” என்ற படைப்பிரிவு வீரர்கள்தான் மார்க்கோஸ் படையணி என அழைக்கப்படுகிறது. இந்தப் படைப் பிரிவு வீரர்கள் கடல்சார் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகிறவர்கள்.1987-ம் ஆண்டுதான் இந்திய கடற்படையில் மார்க்கோஸ் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. தரை, வான், நீர்வழிகளில் யுத்தம் செய்யும் வல்லமை படைத்தது இந்த படையணி. நீர் வழி என்றால் வெறும் கடல் மட்டுமல்ல.. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பெருவெள்ளத்தோடு பாய்ந்தோடும் சீற்றம் கொண்ட ஆறுகளிலும் நின்றும் பயணித்தும் பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் வலிமை பெற்ற படைப் பிரிவு வீரர்கள் இவர்கள். ஆதலால்தான் “முதலை வீரர்கள்” என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். கார்கில் யுத்தம் மற்றும் மும்பையில் பயங்கரவாதிகள் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய போதும் மார்க்கோஸ் படைப் பிரிவு வீரர்கள் களமிறங்கி தேசம் காத்தனர்.தற்போது நடுக்கடலில் தியானம் இருக்கப் போகும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மார்க்கோஸ் படைப் பிரிவு வீரர்கள் 30 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். மோடியின் பாதுகாப்புக்கான 3-வது அடுக்கில் கடற்படை வீரர்கள் இணைந்துள்ளனர். இதில்தான் மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பயணத்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.