நாகர்கோவில் மே 28
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலும் முடங்கியது. 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவிப்பு.
இந்தியாவிற்கு அன்னியச் செலவாணியை ஈட்டி தரும் முக்கிய தொழில்களில் ஒன்று ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் தொழில். கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 35 ஆயிரம் ஹெக்டேரில் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. கீரிப்பறையில் அரசு ரப்பர் கழகமும் ஏராளமான தனியார் நிறுவனங்களும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. அண்மை காலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியது. இதனால் அரசு ரப்பர் கழக மற்றும் தனியார் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தினசரி 2 கோடி ரூபாய்க்கு மேல் ரப்பர் பால் மற்றும் தொழில் மூலம் அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கிடைத்து வந்த அந்த வருமானமும் மழையின் காரணமாக பால் வெட்டும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால் முற்றிலுமாக முடங்கியது.