கருங்கல், மார்- 27
கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதி சேர்ந்தவர் அஜின் (37). இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக (சிஆர்பிஎப்)வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த எமரால்டு, ஏஞ்சல் ஆகியோர் தங்களது சொத்து என்று கூறி 17 சென்று நிலம் விற்பனைக்கு உள்ளதாக அஜினிடம் கூறியுள்ளனர்.
இதற்காக அஜின் 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் அந்த சொத்தை எழுதி கொடுக்காமல் இரண்டு பேரும் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து விசாரித்த போது அந்த சொத்து அவர்கள் உறவினர்களின் சொத்து என்பது தெரிய வந்தது. இதனால் கொடுத்த பணத்தை அஜின் திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அஜித் புகார் செய்தார். அதன் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அஜினிடம் நிலம் வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து எமரால்டு, ஏஞ்சல், சுஜன் ஆகிய மூன்று பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.