ஆரல்வாய்மொழி மார்ச் 29
நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே மேம்பால பணிகள் மற்றும் இணைப்புச் சாலைப் பணிகளை பொதுமக்களின் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க மத்திய ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளரை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்மாவட்ட பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி – மதுரை (246 கி.மீ) வழித்தடங்களை இரு வழிப் பாதைகளாக மாற்றுவதற்கு 2012-2013-ம் ஆண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையில் ஆய்வு செய்ய அனுமதிக்கபட்டது.
இதனடிப்படையில் மதுரை இருவழிபாதை அமைக்க தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில்வே இரு வழிப்பாதைக்காக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை ரூ. 7 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பணிகள் தொடங்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் இப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்பணிகள் 2025-ம் ஆண்டை கடந்த பிறகும் நிறைவு பெறாமல் உள்ளது. மேலும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 50 மீட்டர், அகலம் 10 மீட்டர் ஆகும். நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி வழியாக செல்லும் அனைத்து வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகளும், இதைப்போன்று மறுமார்க்கத்தில் நாகர்கோவிலுக்கு வருகின்ற அனைத்து பேருந்துகளும் தற்போது உள்ள பாலம் வழியாக வருகின்ற காரணத்தால் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அதிக நேரம் பேருந்துகள் சாலைகளில் நின்று செல்கின்ற நிலை ஏற்படுவதால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளவர்களையும், நோய் தாக்குதலுக்கு உட்பட்ட நோயாளிகளையும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்ற அவசர ஆம்புலன்ஸ்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை காலதாமதம் செய்யாமல் போர்கால அடிப்படையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கும், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.