மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த வன்னிவேலம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1920 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தற்போது 140- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், இப்பள்ளியின் 105 வது ஆண்டு விழாவை கிராம மக்கள் கொண்டாட முடிவு செய்து, நிர்வாகத்தை நாடி அனுமதி பெற்றனர்.
இதனை தொடர்ந்து , பள்ளி வளாகத்தினுள் ஆண்டு விழாவிற்கான மேடை அமைத்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனிடையே, வன்னி வேலம்பட்டி கிராம மக்கள் பள்ளி மற்றும் மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில், மாணவ , மாணவிகளுக்கு தேவையான டிபன் பாக்ஸ், சில்வர் தட்டு, குடிநீர் பாட்டில் மற்றும் புத்தகப்பை அடங்கிய எழுதுகோல் , பென்சில், பேனா,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களையும் சீர்வரிசையாக கிராமப் பெண்கள் தலையில் சுமந்து தாரை தப்பட்டையுடன். கிராம முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பள்ளியை அடைந்தனர்.
பள்ளி முன்பு, சீர்வரிசை சுமந்து வந்த கிராமப் பெண்களை மாணவ, மாணவிகள் வரவேற்று ஆட்டம் பாட்டத்துடன் விழா நடைபெற்றது.
இது குறித்து கிராமப் பெண்கள் கூறுகையில் இப்பள்ளியில் தாங்களும், தங்களது பிள்ளைகளை சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் இப்பள்ளியில் ஆண்டு தோறும் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தமிழ் வழி முறையில் நடைபெற்று வருகிறது. தங்களது ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.