தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரத்தில் உள்ள சனத்குமார் ஏரியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 74 ஏரிகள் உள்ளன. இதுபோல் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 546 ஏரிகளும், பேரூராட்சி பகுதிகளில் 14 ஏரிகளும், மாவட்ட முழுவதும் 634 ஏரிகள் உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஏரிகளில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பல ஏரிகளில் மழைநீர் தேங்கும் பரப்பில் பெரும் பகுதியை சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் ஏரியில் தேங்கியு
ள்ள மழை நீர் விரைவாக குறைந்து வறண்டு விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு ஏரிகளில் அடர்ந்து வளரும் சீமை கருவேல மரங்கள் மற்றும் முள் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்த போதிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல ஏரிகளில் மீண்டும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து விடுகின்றன. இதனால் இதற்கு பயன்படுத்தப்படும் மனித உழைப்பு நிதி செலவு ஆகியவை நீண்ட காலத்திற்கு பலன் அளிப்பதில்லை. இதற்கு தீர்வு காண ஏரிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். உரிய நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் இந்த திட்டப்பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சேகர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.