ஆரல்வாய்மொழி மார்ச் 1
அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மருந்தகங்களை தற்போது முதலமைச்சர் மருந்தகமாக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து மக்களை ஏமாற்றும் தி.மு.க அரசுக்கு மக்கள் வரும் தேர்தல் மூலம் தீர்ப்பு வழங்கி பதிலடி கொடுக்க தயாராகி விட்டார்கள் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி மக்களின் நலனை பாதுகாத்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆவார்.
மக்களுக்கு பயன்கிடைத்த அம்மாவின் திட்டங்கள் பலவற்றை, தி.மு.க அரசு முடக்கிப் போட்டுள்ளது.
மேலும் மக்களின் நலனை பாதுகாக்க குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைப்பதற்கு ஏதுவாக எழை, எளிய மக்களின் நலன்கருதி அம்மா மருந்தகங்களை புரட்சித்தலைவி அம்மா உருவாக்கினார்கள்.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அம்மா மருந்தகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், திங்கள்சந்தை, களியக்காவிளை, நித்திரவிளை, மயிலாடி, கருங்கல், அருமனை, குலசேகரம் ஆகிய பகுதிகளில் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்றைய முதலமைச்சரால் 11/01/2016 அன்று இத்திட்டத்தினை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்கள். முதலில் அம்மா மருந்தகம் ஆரல்வாய்மொழியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. 01-08-2024 முதல் சொந்தக் கட்டிடத்தில் அம்மா மருந்தகம் இயங்கி வந்தது.
இந்நிலையில் தி.மு.க அரசு அம்மா மருந்தகத்தை தங்களுக்குரிய கை வந்த கலையான பொய் வண்ணத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டி முதலமைச்சர் மருந்தகம் என பெயர் மாற்றி இதற்கென ஒரு விழா நடத்தி பணத்தை வீணடித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக முதலமைச்சர் அம்மா மருந்தகங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்று வாக்குறுதி அளித்து அறிவித்திருந்தார். ஆனால் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளான 24-02-2024 அன்று ஆரல்வாய்மொழியில் இயங்கி வந்த அம்மா மருந்தகத்தை இயங்காமல் செய்து, அம்மா மருந்தக விளம்பர போர்டினை மாற்றி விட்டு, முதலமைச்சர் மருந்தகம் என புதிய விளம்பர பலகையை வைத்துள்ளார்கள். இந்த பொய்யான செயலும், போலி மகிழ்ச்சியும் எத்தனை நாள். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரின் அறிவிப்பு காற்றில் பறந்ததா? வீணானதா?
10 ஆண்டு கால அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சுமார் 31 ஆயிரத்து 500 மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் சுமார் ஆயிரத்து 850 அம்மா மினி கிளினிக் மருத்துவர்களையும், பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வந்த சுமார் 500 மருத்துவர்களையும் வீட்டிற்கு அனுப்பிய ஆட்சி தான் தி.மு.க ஆட்சி. ஒரு நாள் இந்த நிலைமைக்கு எல்லாம் மாறுதல் உண்டு. அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு. மக்களை ஏமாற்றும் தி.மு.கவுக்கு மக்கள் வரும் தேர்தல் மூலம் தீர்ப்பு வழங்கி பதிலடி கொடுக்க தயாராகி விட்டார்கள். இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.