கருங்கல் பிப்- 28
கிள்ளியூர் அருகே தொலையாவட்டம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப் போவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
மேலும் அரசு மதுபான கடை திறப்பதாக கூறிய இடத்தில் உள்ள கடையின் முன்பு நின்று கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அப்பகுதியினர் கூறுகையில் எந்த காரணத்தைக் கொண்டும் டாஸ்மாக் கடை இங்கு திறக்க அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த கடையை பல வருடங்களுக்கு முன்பு பலகட்ட போராட்டங்களை நடத்தி மாற்றியதாகவும் கூறினர்.
மேலும் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு கடையை பல கட்ட போராட்டங்கள் நடத்தி மாற்றியதால், அந்த கடையை கிள்ளியூர் பகுதியில் கொண்டு வர டாஸ்மாக் அதிகரிகள் முயற்சி செய்வதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். எனவே இந்தப் பகுதியில் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரசார் கூறினார்கள்.
இதனை அடுத்து போலீசார் தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினார்கள். தொடர்ந்து இது தொடர்பாக கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன் என்பவரிடம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் மனு அளித்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.