புதுக்கடை, பிப்-22
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியை அதே பகுதி வசந்த் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் இருந்து குமரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தமிழக அரசு மீன்வளத் துறையின் வேலைக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று அந்த குவாரியில் இருந்து கல்கொண்டு செல்லும் போது அதே பகுதி பாக்கோட்டு விளை என்ற இடத்தை சேர்ந்தவம், ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டருமான கோபிநாதன் (65), அவர் மனைவி பிரபா (57) ஆகியோர் கல்கொண்டு செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.
இதை குவாரி உரிமையாளர் வசந்த் மனைவி வின்சி (36) என்பவர் தட்டிக் கேட்டார். இதில் கோபிநாதன், பிரபா சேர்ந்து வின்சியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக வின்சி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனையில் கோபிநாதனுக்கும் காயம் ஏற்பட்டு, அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.