ஊட்டி.பிப்.10.
தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க இரவு நேர கண்காணிப்பு பணியை தமிழக வனத்துறை தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் வன சரகர் சசக்குமார் தலைமையில் கூடலூர் வன சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடக்கிய குழு ஏற்படுத்தி வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணியை நீலகிரி மாவட்ட வனத்துறை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதி நிறைந்த மாவட்டமான நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய உயிர் சூழல் மண்டலமாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு, காட்டு மாடு, கடமான், புள்ளி மான்கள், கருமந்தி, மலபார் அணில், செந்நாய்கள், அறிய வகை பறவைகளான இருவாச்சி, மரகதப்புறா, உட்பட கிளி, மரங்கொத்தி, தேன்சிட்டு, என பறவைகளும், ஊர்வனங்கள், அறியவகை பட்டாம்பூச்சிகள், பொன்வண்டு இனங்களும் வசிக்கின்றன. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுவதும், புலி மற்றும் மான்கள் வேட்டையாடப்படுவதும் தொடர்கின்றன. இந்நிலையில் பசுமை தமிழகத்தை முன்னெடுக்கும் தமிழக அரசின் திட்டங்களில் வனவிலங்குகளை காப்பாற்றி வனங்களை பெருக்குவதும் முக்கிய திட்டமாகும் அதன் அடிப்படையில் வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டி வனத்துறை மூலம் வேட்டைகளை தடுக்க இரவு நேரத்திலும் வன பாதுகாப்பு ரோந்து பணியை தமிழக அரசு நீலகிரியில் முதல் முறையாக தொடங்கியுள்ளது.