நாகர்கோவில் பிப் 8
தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறும் 67 லட்சம் பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்துவது குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்க கேட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நோட்டீஸ் அளித்துள்ளார்.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசியை கருத்தில் கொண்டால் இது மிகவும் குறைவான தொகை. போதிய ஓய்வூதியம் வழங்காத காரணத்தால் சுமார் 67 லட்சம் பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வறுமையை எதிர் கொள்கின்றனர். 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இந்த தொகை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ளது. ஓய்வூதிய அமைப்புகள், தொழில் சங்கங்கள் என பலதரப்பட்ட மக்கள் இதற்காக பல்வேறு போராட்டங்கள் மேற்கொண்டும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஓய்வூதிய தொகையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமென ஒத்துக்கொண்ட போதிலும் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
நமது மூத்த குடிமகன்களை கண்ணியத்துடன் வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே இவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் என்ற தொகையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய முக்கியம் வாய்ந்த விஷயம் குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டுமென ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.