தக்கலை, பிப்-8
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சரல் விளையை சேர்ந்த 47 வயதுடைய தொழிலாளி ஒருவர் நேற்று முன்தினம் மருந்து கோட்டையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். டீ குடித்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்வதற்காக தக்கலை – குலசேகரம் சாலையை வேகமாக கடக்க முயன்றார்.
அப்போது குலசேகரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. தொழிலாளி சாலையில் குறுக்கே ஓடுவதைப் பார்த்த பஸ் டிரைவர் சுதாரித்துக் கொண்டு பஸ்ஸை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அதற்குள் பஸ் தொழிலாளி மீது மோதியது.
இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் பஸ் சக்கரத்தில் சிக்காததால் காயத்துடன் உயிர் தப்பினார். பொதுமக்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினார்கள். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.