மதுரை பிப்ரவரி 4,
மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு
1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான பிறகு 2025 ல் முதல் பெண் ஆணையாளராகவும், 71 வது கமிஷனராகவும் சித்ரா விஜயன், ஐஏஎஸ் புதிதாக பொறுப்பேற்று கொண்டார். ஏற்கனவே பணியாற்றிய மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சித்ரா விஜயன், ஐஏஎஸ்., மதுரை மாநகராட்சியின் 71 வது ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் மின் ஆளுமைத்துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன், ஐஏஎஸ்., புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். 2019 பேட்ச் ஐஏஎஸ்., அதிகாரியான இவர் திருச்சி, தர்மபுரி உட்கோட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியவர். அத்துடன், தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னை மீனாட்சி அரசாளும் மதுரையில் அரசு பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள்.
மதுரை மாநகரம் என்றாலே அன்னை மீனாட்சி அரசாளுகின்ற நகரம் என்ற தனித்த பெருமை பெற்றது. பெண்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு இணையான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற களத்தில் நின்று வென்று தங்களை நிரூபித்துக் கொண்ட பெண் ஆளுமைகள் பலர் தமிழ்நாட்டில் முக்கிய அரசு பதவிகளில் பொறுப்பு வகித்து தனித்த முத்திரையை பதித்து வருகின்றனர் அந்த வரிசையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா ஐஏஎஸ், மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன்,
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனராக மோனிகா ராணா ஐஏஎஸ், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளராக இந்துமதி, வருவாய் கோட்டாட்சியர்களாக ஷாலினி ஜெயந்தி, வருவாய் வட்டாட்சியர்களாக மீனாட்சி, செந்தாமரை , மாநகராட்சி நகர் நல அலுவலராக இந்திரா, முதன்மை கல்வி அலுவலராக ரேணுகா, காவல்துறை துணை ஆணையராக அனிதா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக சித்ரா, கள்ளழகர் திருக்கோவில் கண்காணிப்பாளர் பிரதீபா என பெண்களே அனைத்து முக்கிய பொறுப்புகள் வகித்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளராக திருமதி சித்ரா விஜயன் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளது மதுரைக்கே மிகப்பெரிய பெருமையை தந்து வருகிறது.