தேனி மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஆர்.சிவபிரசாத், முன்னிலையில் இன்று (16.05.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார அலுவலகத்திற்குட்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஏற்றி செல்லும் 427 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் இன்று நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி, முதலுதவிப்பெட்டி, ஏறி இறங்கும் படிகட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை, கண்காணிப்பு கேமிரா உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும், வேக கட்டுப்பட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மெற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளி வாகன ஓட்டுநர்களிடம் தெரிவித்ததாவது,
ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை கூட்டாய்வு மூலம் ஆய்வு செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணத்தின்போது கட்டாயம் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைப்பேசி எண், வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண், காவல் நிலைய தொலைப்பேசி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண் நன்றாக தெரியும் வகையில் கட்டாயம் எழுதப்பட வேண்டும்.
ஒரு வாகனத்தின் திறன் எவ்வாறு முழுமையாக உள்ளதோ அதேபோன்று வாகன ஓட்டுநர்களும் முழுமையாக இருக்க வேண்டும். முறையாக மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு விதித்துள்ள வழிமுறைகளையும், சாலை பாதுகாப்பு விதிகளையும், முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதால் வாகனங்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சுகாதாரத்துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருமுறை மட்டும் பரிசோதனை மேற்கொண்டால், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், போன்ற நோய்களுக்கு தங்களது இருப்பிடத்திலேயே மருந்து, மாத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோன்று, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யாத வாகன ஓட்டுநர்கள் பதிவு செய்வதற்கும், பதிவை புதிப்பிப்பதற்கும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பள்ளி வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மிகவும் பாதுகாப்பாக பள்ளி வாகனத்தை இயக்கிய 10 பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீ விபத்து மற்றும் மீட்பு முறை குறித்து மாவட்ட தீயணைப்புத்துறையின் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட 283 பள்ளி வாகனங்கள் வருகின்ற 21.05.2024 அன்று கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சிங்காரவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் .சந்திர குமார், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் .கோவிந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர் .மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
Leave a comment