கன்னியாகுமரி ஜன 31
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில்;
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை ஊரை சார்ந்த மீனவர் ஜான்சனின் கட்டுமரம் ஆழ்கடல் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்த இடரில் சிக்கிய நான்கு நபர்களில் மூன்றுபேர் தப்பித்து கரைசேர்ந்த நிலையில் ஜான்சனை மட்டும் மீட்க முடியவில்லை.
தப்பித்த மீனவர்கள் கரை சேர்ந்ததும் இந்த தகவலை குடும்பத்தினருக்கும் கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்
இதனடிப்படையில் தேடுதல் பணி துவங்கியிருந்தாலும் மிகவும் மந்தமான நிலையிலேயே நடந்துவருகிறது . இன்னும் உடல் கிடைக்காத நிலையில் குடும்பத்தினரும் ஊர்மக்களும் மிகுந்த வருத்தத்துடன் இருக்கின்றனர்.
கடலில் இடருக்குள்ளான மீனவர்களை உயிருடன் மீட்கவோ அல்லது இறந்த உடலை மீட்கவோ இந்த அரசு எப்போதுமே மும்முரம் காட்டுவது இல்லை.
ஓகி புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் சரி இதுபோன்ற விபத்துகளிலும் சரி. மீனவர் சமுதாயம் உதவிசெய்ய நாதியற்று நிற்கும் நிலை தான் இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும் மீனவர்களை மீட்க குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்போம் என்ற பொய் வாக்குறுதியை கொடுத்து ஒரு தலைமுறையையே ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த பித்தலாட்டத்தை உணர்ந்த மக்கள் உங்களை தூக்கி எறியும் காலம் மிக தொலைவில் இல்லை.
அரசு இந்த நிகழ்வில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்து , தேடும் பணியை மும்முரப்படுத்தி, மீனவர் ஜான்சனின் உடலை விரைந்து மீட்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே வேதனையின் உச்சத்தில் இருக்கும் எம்மக்களை இன்னும் வருத்தாதீர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.