தமிழ்நாட்டில் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் “புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ” செயல்பட்டு வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப மையங்கள் அமைக்கப்படுகிறது. ஆறு மாத காலத்திற்கு மையங்கள் நடைபெறும். இம்மையங்களில் பயிலும் கற்போர்களுக்கு கல்வி தன்னார்வலர்கள் மூலமாக அடிப்படை எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது. இறுதியில் மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத அனைவரையும் கண்டறியக்கூடிய அளவில் விரிவான கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலநீலிதநல்லூர் வட்டாரம் கடையாலுருட்டி பகுதியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் திரு.சீவலமுத்து அவர்களின் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட கல்லாதோர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்களிடம் மையத்தில் சேர்ந்து பயில்வதற்கான ஆர்வத்தை தெரிவித்து தனது ஆதார் விவரத்தை அளித்தனர்.