கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக, பர்கூர் அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை போலுப்பள்ளியில் செயல்பட்டு வரும் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஒசூரில் செயல்பட்டு வரும் தானியங்கி உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகிய தொழில் நிறுவனங்களை பார்வையிட அழைத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் 2024 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற உரையில் “MSME” நிறுவனங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்தும் வகையில் ஒரு தொடர் பரிமாற்றத் திட்டம் உருவாக்கப்படும். இதனால் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்புகள் பலப்படுத்தப்படும். இதன்மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் பணிவாய்ப்பு பெற இயலும் எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், சென்னை அவர்கள் எல்லா மாவட்ட தொழில் மையத்திற்கும் அம்மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்தும் வகையில் அரசு பாலிடெக்னிக்குகள் / ஐடிஐ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களை பார்வையிடவும், அதன்மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஐடிஐ மற்றும் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 600 மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களை பார்வையிட ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று, கிருஷ்ணகிரி, மாவட்ட தொழில் மையம் மூலமாக, பர்கூர் அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 50 மாணவர்களை போலுப்பள்ளியில் செயல்பட்டு வரும் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஒசூரில் செயல்பட்டு வரும் தானியங்கி உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகிய தொழில் நிறுவனங்களை பார்வையிடவும், பயிற்சி மேற்கொள்ளவும் அழைத்து செல்லப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் .ச.பிரசன்னபாலமுருகன், திட்ட மேலாளர் .மூ.ராமமூர்த்தி, பர்கூர் அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரி முதல்வர் .முருகன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.