மயிலாடுதுறை.25
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தொடக்கிவைத்தார்.
ஆண்டுதோறும் ஜன.1 முதல் ஜன.31 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் நடைபெற்று வரும் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சியாக, மயிலாடுதுறையில் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.விஷ்ணுபிரியா கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து, அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேரணியை கோட்டாட்சியர் தொடக்கி வைத்தார். இதில், இப்பள்ளியின் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியவாறு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர்.