சிவகங்கை: ஜன23
சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் 51 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 46 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து , 164 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டிலான 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 53 , 039 பயனாளிகளுக்கு 161 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் . பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நகரம்பட்டியில் 50 – லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலையை திறந்து வைத்தார் .
காரைக்குடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீர கவியரசர் முடியரசனார் திருவுருவச் சிலை அமைக்கவும் , சிவகங்கையில் 1 – கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கும் பணிக்கும் வேறு சில பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார் .
இதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது:சிவகங்கை மண்ணுக்கு வரும்போது எனக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது . வீரம் பிறக்கிறது , மன்னர் முத்துவடுகநாதர் , வீரமங்கை வேலுநாச்சியார் , மானம் காத்த மருது சகோதரர்கள் , தியாகச் சுடர் குயிலி வாழ்ந்ததும் இதே சிவகங்கைச் சீமையில் தான் . இந்த மண் வீரத்துக்கு அடிப்படையான , மற்றும் தமிழின் தொன்மையை உலகிற்கு உரைக்கக் கூடிய கீழடி தடயங்களும் கொண்டது இதே சிவகங்கை மண் தான் . இந்த மண்ணில் நடக்கக்கூடிய விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . மேலும் இன்று புதிய அறிவிப்புகளையும் அறிவிக்கிறேன் . முதல் அறிவிப்பு : சிவகங்கை மாவட்டத்திற்குரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிதாக 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் .இரண்டாவது அறிவிப்பு : திருப்பத்தூர் நகரத்திற்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும் . மூன்றாவது அறிவிப்பு : புதிதாக உருவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட ரூபாய் 30 கோடி நிதி உதவி வழங்கப்படும் . தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது .ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்தை பாரபட்சம் பார்த்து , எதிரிகளாகவும் பார்த்து திட்டங்களை முடக்குகிறது .இதுபோன்ற தடைகளையும் தாண்டித்தான் தமிழக அரசு செயல்பட்டு மாநில அரசின் நிதியை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது .
ஆனாலும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எதையும் பகுத்துப் பார்க்காமல் தமிழ்நாடு திவலாகிவிட்டது என்கிறார் . அவருடைய எண்ணம் இந்த அரசு திவாலாக வேண்டும் என்று நினைக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது .அவர் போடும் கணக்கு எல்லாம் தப்புக் கணக்கு தான் தமிழக மக்கள் எங்களுடைய செயல்பாடுகளையும் , திட்டங்களையும் கணக்குப் போட்டு முதல் மதிப்பெண் கொடுக்கிறார்கள் அது எங்களுக்கு போதும் . எதிர்க்கட்சித் தலைவர் மற்றொன்றும் சொல்கிறார் .
திமுக ஆட்சிக்கு 13 அமாவாசைகள் தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அவர் இருட்டில் இருந்து கொண்டு காலண்டரை கிழித்துக கொண்டிருக்கிறார் .இருக்கட்டும் பரவாயில்லை . நாம் மக்களுக்கான நன்மைகளை எண்ணி திட்டங்களை செயல்படுத்துவோம் . மக்களுடைய மகிழ்ச்சிகளை மட்டும் நாம் எண்ணிப் பார்ப்போம்.சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் கொடுத்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது உதயசூரியன் ஒளியில் தமிழ்நாட்டை திமுக தான் வழி நடத்தும் என்பது உறுதியாகிறது . இதற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் உழைக்கும் .இவ்வாறு அவர் பேசினார் .
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வரவேற்றுப் பேசினார் . விழாவில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் , ராஜ கண்ணப்பன் , கோவி செழியன் , சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திப. சிதம்பரம் , சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி , மாங்குடி , சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சி.எம். துரைஆனந்த் உள்பட பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி நன்றி கூறினார் .