கோவை ஜன:21
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆழியார் அணையில் படகு இல்லம் அமைத்து படகு சவாரி ஏற்படுத்துதல் மற்றும் பூங்கா மேம்பாட்டு பணிகள், மற்றும் கோதவாடி ஊராட்சியில் உள்ள குளத்திற்கு உபரிநீர் மூலம் நீர் நிரப்பி சுற்றுலாத் தலமாக மாற்றுவது தொடர்பாக சுற்றலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கா.ஈஸ்வரசாமி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) திரு.கோவிந்தன், கௌசிகா நீர்க்கரங்கள் தலைவர் பி.கே.செல்வராஜ், சதாசிவம் , மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, செயற் பொறியாளர்(பரம்பிக்குளம் கோட்டம்) சிவகுமார், வட்டாட்சியர் கணேஷ்பாபு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக செயற்பொறியாளர், திட்ட ஆலோசகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
பொள்ளாச்சியில் அமைந்துள்ள ஆழியார் அணை மிகவும் புகழ்பெற்ற நீர்தேக்கம் ஆகும். ஆழியார் அணை பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. இவ்வணையானது எப்போதும் கடல் போல் காட்சியளிப்பதால் ஆழியார் என்று பெயரிடப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் 1962ல் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 81 மீட்டர் மற்றும் அதன் கொள்ளளவு 2940 கி.மீ3 ஆகும். பொதுப்பணித்துறை (நீர்வளம்) யிடமிருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா புனரமைப்பு பணி, செயற்கை நீருற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், படகு இல்லம் அமைத்து படகு சவாரி, மாதிரி உருவங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கருத்துரு பெறப்பட்டுள்ளது.
வால்பாறைக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்க்ஷ மற்றும் உள்ளுர் பொதுமக்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர். ஆண்டிற்கு ஆறு முதல் ஏழு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் ஆழியார் அணை பகுதி மற்றும் பூங்காவினை சுற்றுலா மேம்பாடுப் பணிகள் செய்வதற்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சுற்றுலா துறையின் மூலம் செய்யப்பட வேண்டிய சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன
கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள கோதவாடி ஊராட்சியில், உள்ள குருநல்லிபாளையம் – கோதவாடி குளம் மூலம் 31,272ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த குளம் 11.07 மீ.க.அடி கொள்ளளவு கொண்டது. குளத்தின் மண் அணையின் நீளம் 960 மீட்டர் ஆகும். இக்குளத்திற்கு உபரிநீர் மூலம் நீர் நிரப்பி சுற்றுலா தலமாக மாற்றுவது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து சுற்றலாத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செந்தில் அண்ணா
வெளியீடு-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம்