திருப்பத்தூர் :ஜன:21, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சமுத்திரம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுடுகாடு மிகவும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இந்த சுடுகாட்டை சீரமைத்து தர பல மாதங்களாக போராடிவரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை பொதுமக்கள் சார்பாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் அவர்களிடத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சமுத்திரம் ஊராட்சியில் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் இருகன் வட்டம், பங்காளத்தான் உள்ளிட்ட பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில் சுடுகாட்டிற்கு பிணங்களை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் போது அங்கே பெரிய முள் புதர்கள் அதிகமாக உள்ளதால் அடக்கம் செய்யும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அகால மரணங்கள் நேரும்போது சில நேரங்களில் இரவு நேரங்களில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய செல்ல வேண்டி உள்ளது சுடுகாட்டிற்கு செல்லும் சாலையும் மிக மோசமாக உள்ளது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுடுகாட்டினை சீரமைப்பு செய்து தர அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே எப்போது சீரமைக்கப்படும்? என்றற எதிர்பார்ப்போடு அந்த பகுதி மக்கள் உள்ளனர்.