ஈரோடு ஜன 10
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அச்சகம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது .
அப்போது கலெக்டர் கூறியதாவது
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. மேலும் தங்கும் விடுதிகளில் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை வழங்குபவர்களை மட்டுமே தங்க வைக்க வேண்டும். அச்சக உரிமையாளர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அச்சடிக்கும் துண்டு பிரசுரங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பாக விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி முழுமையாக தெரியும் வகையில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அச்சகம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.