விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து புகார்
ராமநாதபுரம், ஜன.4-
ராமநாதபுரத்தில் மழை மற்றும் நோய் தாக்குதலால் பாதித்த நெல், மிளகாய் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து புகார் மனு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதலால் பாதித்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
அதிக கனமழை, இயற்கை இடர்களால் பாதித்த நெல் பயிருக்கு 100 விழுக்காடு தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
தொடர்மழையால் பாதித்த மிளகாய் சாகுபடி ஏக்கருக்கு நிவாரணம் ரூ.25 ஆயிரம், இழப்பீடாக ரூ.50 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
முதுகுளத்தூர் வட்டாரத்தில் கடந்த 2023-2024 ஆம் ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழிவுக்கு தாமதிக்காமல் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய
5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம், பாதித்த விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தலைவர்
எம்எஸ்கே. பாக்கியநாதன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ரமேஷ் கண்ணன், செந்தில்குமார், காளிராஜா உள்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள்
அழுகிய நெல், மிளகாய் செடிகளுடன் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கைகளை நேரில் வந்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில்திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளிடம் ராமநாதபுரம் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் வேளாண்மை துறையினர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியலை கைவிட்டு விவசாயிகள் சங்கம் தலைவர் பாக்கியநாதன் தலைமையில் 10 பேர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.