களியக்காவிளை, டிச. 30-
வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெதுகும்மல் மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா மற்றும் பஜனை ஊர்வலம் நடைபெற்றது.
களியக்காவிளை அருகே அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி கோயிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்துக்கு மெதுகும்மல் ஊராட்சித் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அதங்கோடு கோயில் பொருளாளர் ராஜூ காவிக்கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்சிறை ஒன்றிய சமயவகுப்பு ஆசிரியர் ரெவீந்திரகுமார், இந்து தர்ம வித்யாபீட மாவட்ட துணை அமைப்பாளர் பொன். வேலப்பன், முன்சிறை ஒன்றிய அமைப்பாளர் சுபாஷ்குமார், ஒன்றிய துணை அமைப்பாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடந்த ஆண்டு விழா துவக்க நிகழ்ச்சியில் பங்கலாட்சி செல்லசுவாமி திருவிளக்கேற்றி வைத்தார். அதன்பின்னர் மண்டல அளவிலான சமய வகுப்பு மாணவர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பிற்பகலில் நடந்த நிறைவு விழாவுக்கு முன்சிறை ஒன்றிய அமைப்பாளர் சுபாஷ்குமார் தலைமை வகித்தார். முன்சிறை ஒன்றிய ஆசிரியை நிர்மலா அஜித்குமார் அறிக்கை வாசித்தார். இந்து தர்ம வித்யாபீட மாவட்ட துணை அமைப்பாளர் பொன். வேலப்பன், மாவட்ட சமயவகுப்பு பயிற்சி முகாம் அமைப்பாளர் ஐயப்பதாஸ் ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கறச்சிவிளை கோயில் தலைவர் அனீஷ் பரிசுகள் வழங்கினார்.
முன்னதாக முன்சிறை ஒன்றிய சமயவகுப்பு ஆசிரியை சுகிர்தா தங்கசுவாமி வரவேற்றார். மாவட்ட திருவிளக்கு பூஜை துணை அமைப்பாளர் விலாசினி வில்சன் நன்றி கூறினார்.
…