அரியலூர், டிச;17
சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையிலும், கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு அரசு ”கலைஞர் கைவினைத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் வங்கிக் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட 25 கைவினை தொழில்களில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
கலைஞர் கைவினை திட்டத்தில் கட்டிட வேலைகள், நகை செய்தல், மரவேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாடங்கள், சுடுமண் வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன்வலை தயாரித்தல், தையல் வேலை, சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போன்ற தொழில்கள், துணி வெளுத்தல் / தேய்த்தல், பாரம்பரிய இசைகருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், படகு கட்டுமானம், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள கைவினை கலைஞர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அரியலூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்