கன்னியாகுமரி டிச 16
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் திருமன்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 2000 ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10 மீட்டர் கொண்ட Bowstring Arch Bridge (பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் பாலம்) ஆகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் படகு மூலம் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது. இந்நடைபாலம் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் எளிதாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இப்பாலத்தில் 25 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது. நடைபெற்று வரும் பாலப்பணிகளை சென்னை ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
மேலும் டிசம்பர் 30 மற்றும் 31 அன்று கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பொதுப்பணித்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மார்ஷல் நேசமணி மணிமண்டம், பொதுவுடமை வீரர் பஜூவானந்தம் மணிமண்டபம், சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபம். பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம், காந்தி நினைவு மண்டபம் உள்ளிட்டவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிங்கப்படும். மேடை அமைத்தல் பணிகளும் பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும். தற்போது திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலப்பணிகள் 95 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. கடல் அரிப்பு, காற்றின்வேகம் போன்ற இயற்கை காரணிகளை கருத்தில் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.