தக்கலை, டிச- 14
குமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற வேளிமலை குமாரசுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தக்கலை காவல் நிலையம் மற்றும் தக்கலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களில் காவடிகட்டி குமாரகோயிலுக்கு பவனியாக எடுத்துச் செல்வது வழக்கம். இதற்காகக் காவலர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காவடிகட்டுவார்கள்.
நேற்று (13. ம் தேதி) கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் தக்கலை காவல் நிலையத்தில் இருந்து புஷ்பக்காவடி பவனியாக வேளிமலைக் குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் தக்கலை காவல் நிலையத்தில் நாதஸ்வர மங்கள இசை ஒலித்தது. காவல் நிலையத்துக்குள் பூஜை நடந்ததால் யாரும் காலணிகள் அணிந்து ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கப்படவில்லை. காவலர்கள் காவி வேட்டிகட்டி, உடல் முழுவதும் சந்தனம் பூசி காவடிக்கட்டு பூஜையில் கலந்துகொண்டனர்.
காவலர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கோஷம் முழங்க காவடி பவனியாகச் சென்றனர். காவடிக்கட்டு விழாவை முன்னிட்டு தக்கலை காவல்நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த ஆதித்ய வர்மா, பத்மநாபபுரம் நீதிபதிகள் ராமசந்திரன், மாரியப்பன், இமா ஜாக்லின் புத்தா, மார்த்தாண்டம் டி எஸ்பி நல்லசிவம், தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது போன்று பொதுப்பணி துறை சார்பில் யானை ஊர்வலத்துடன் காவடி பவனி நடைபெற்றது..
தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1891-ம் ஆண்டு கட்டப்பட்டவை. விவசாயம் செழிக்க பொதுப்பணித்துறை சார்பிலும், குற்றங்கள் குறைய காவல்துறை சார்பிலும் வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்குக் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுக்கும் வழக்கம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்று வரும் பாரம்பர்ய நிகழ்வு எனபது குறிப்பிடத்தக்கது.