நாகர்கோவில் டிச 11
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விவேகானந்தன், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேற்று சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில், 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்தவர்கள்), விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- 2025 ஆனது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய அலுவலர்களால் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி விண்ணப்ப படிவங்கள் மீது வாக்குச்சாவடி நிலை அலுவலர், மேற்பார்வையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, குளச்சல் சட்டமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக இட தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத். அனைத்து துணை வட்டாட்சியர்கள் (தேர்தல்), துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.