ஊட்டி.டிச. 11
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்டம் முன்னெடுத்துள்ள காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024 என்ற திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூர் நகரில் உள்ள புனித ஜான் பாப் டிஸ்ட் ஆலயத்தில் பழ மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. மக்கள் அதிக ஆர்வத்துடன் பழ மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கே ஜே ராஜு அவர்கள் கூறியதாவது-
பொதுமக்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டதுடன் எங்கள் முயற்சிக்கு பேராதரவு கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த பூமியை காக்க உள்ள ஒரே வழி மரங்கள் நடுவது தான் என வலியுறுத்தி கூறப்பட்டது. மேலும் மின்னாற்றலை சிக்கனமாக பயன்படுத்துதல், சைக்கிளில் பயணம் செய்தல், பிற வாகனங்களுக்கு பதிலாக பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துதல், வீடுகளில் மின் உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாத போது பிளக்கை கழற்றி வைத்தல், பொருட்களை வாங்க செல்லும்போது துணி பைகளை பயன்படுத்துதல்,
குளிக்கும்போது ஷவரை குறைந்த அளவு தண்ணீர் வருமாறு வைத்தல், பழைய குண்டு பல்புகளுக்கு பதிலாக நவீன எல்இடி பல்புகளை பயன்படுத்துதல், குறைந்த அளவில் மட்டுமே மாமிசங்களை உண்ணுதல், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரீசார்ஜ் பேட்டரிகளை பயன்படுத்துதல், வீடுகளில் உண்டாகும் குப்பையின் அளவை குறைத்தல் போன்ற எளிய செயல்பாடுகளால் நாம் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றத்தை தடுக்கவும் நாம் வாழ்வதற்கு உள்ள ஒரே பூமியை காக்க மரங்கள் நடுவதுதான் ஒரே வழி என வழிபாட்டு தலங்களில் மரம் நடும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.