நாகர்கோவில் டிச 9
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கலந்துகொண்டு, பணி நியமன ஆணையினை வழங்கி தெரிவிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சார்ந்த மாவட்டங்களைச் சார்ந்த 12 நிறுவனங்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 60 மாணவ மாணவிகள் இந்த முகாமில் கலந்துக்கொண்டனர். இதில் 24 மாணவ மாணவியருக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் சென்னை, பெங்களுர் போன்ற பெரு நகரங்களில் பெறும் வாய்ப்புகளை போன்று நமது மாவட்டத்திலேயே உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அதற்கான பயிற்சிகளை பெற்றுக்கொண்டு வருங்காலங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு நல்ல பணி வாய்ப்புகளைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். முன்னதாக இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதற்கான துறைசார் வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு தலையங்கங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் ராகுல், ஓசூர் மண்டல திட்ட மேலாளர் ஜிஜின் துரை, பல்வேறு
நிறுவனங்களைச் சார்ந்த மனித வள அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.