அருமனை, டிச- 6
அருமனை அருகே உள்ள மூடோடு பகுதியில் உள்ள 12 வயது சிறுவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆங்கில ஆசிரியையின் காரில் இருந்த பின்பக்க கேமரா திருட்டு போனது சம்பந்தமாக அந்த ஆசிரியை அந்த ஆறாம் வகுப்பு மாணவனை விசாரித்து, அவனை கம்பால் தாக்கியதாகவும், இதனை வெளியில் கூறினால் வீட்டிற்கு வந்து அடிப்பேன் என மிரட்டினாராம்.
மாணவன் சோர்வாக இருப்பதால் சந்தேகம் அடைந்த தாயார் கேட்டபோது சம்பவத்தை கூறியுள்ளார். மேலும் அவனது உடலில் கம்பால் தாக்கிய காயம் இருப்பதை கண்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் மாணவனை சேர்த்தார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து மாணவனின் தாயார் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் ஃபோனில் கேட்டபோது அவரையும் மிரட்டினாராம். இது குறித்து மாணவனின் தாயார் அடுமனை போலீஸ் நிலையத்திலும், மார்த்தாண்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்திலும் புகார் செய்து அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.