நாகர்கோவில் – நவ – 30,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா(48) இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரிடம் இருந்து 30 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்து பிரேக் டான்ஸ் ராட்டினம் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். அந்த ராட்டினத்தை அவர் விலை கொடுத்து வாங்கிய ரமேஷிடமே வாடகைக்கு விட்டுள்ளார்.
ரமேஷ் அதை ஒவ்வொரு ஊரிலும் பொருட்காட்சி நடக்கும்போது எடுத்துச் சென்று ராட்டினத்தை காட்சிப்படுத்தி, அதில் மக்களை ஏற்றி மகிழ்விப்பார். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ராட்டினத்திற்காக முதலீடு செய்த சகுந்தலாவுக்கு 50 சதவீதத் தொகையும், அதைக்கொண்டு தொழில் செய்யும் ரமேஷ்க்கு 50 சதவீதத் தொகையும் பகிரப்பட்டு வந்தது. இதேபோல் சகுந்தலாவுக்கு சொந்தமாக மரணக் கிணறும் உண்டு. இப்போது இவர்களது ராட்டினம் நாகர்கோவில், கன்கார்டியா பள்ளியில் நடந்துவரும் பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் சகுந்தலாவோ, ரமேஷோ இங்கே ராட்டினத்தை கொண்டுவரவில்லை. அவர்களிடம் இருந்து திருடி வினோத் என்பவர் போட்டுள்ளார்.
வினோத் என்பவரிடம் இருந்து, ரமேஷ் இருபது லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்கு ரமேஷ், வினோத்திற்கு மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை கந்துவட்டியாகக் கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில் அதில் அவர் பாக்கிப் போட்டதால் வினோத், இந்த ராட்டினத்தை எடுத்துள்ளார். ராட்டினத்தின் உரிமையாளர் ரமேஷ் அல்ல. சகுந்தலா ஆகும். அவர் அந்தத் தொழிலில் முன் அனுபவம் உள்ள ரமேஷ்க்கு லாபப் பகிர்வு என்னும் முறையில் தொழில் செய்ய அனுமதி கொடுத்துள்ளார். இந்நிலையில், ரமேஷ் கொடுக்க வேண்டிய பணத்திற்கு ஈடாக சகுந்தலாவின் ராட்டினத்தை எடுப்பது எப்படி சரியாக இருக்கும்?
இதேபோல் ஏற்கனவே ரமேஷ் கொடுக்க வேண்டிய பணத்திற்காக சகுந்தலாவுக்குச் சொந்தமான மரணக் கிணற்றின் சில பாகங்களை இதே வினோத் எடுத்துச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக சகுந்தலா கொடுத்த புகார் மனுக்கள் திருவேற்காடு காவல் நிலையத்திலும், ஆவடி ஆணையர் அலுவலகத்திலும் நிலுவையில் உள்ளது. இதேபோல் சேலம் மாவட்டம், ஆட்டூர் பகுதியில் நடந்த பொருட்காட்சியிலும் சில பொருட்களை திருடிச் சென்றார். இதுகுறித்து கொடுத்த புகார் ஆற்றூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சகுந்தலாவிடம் இருந்து திருடிய ராட்டினத்தை கொண்டு தான் வினோத் நாகர்கோவிலில் கன்கார்டியா பள்ளியில் நடந்துவரும் பொருட்காட்சியில் கடை விரித்துள்ளார். சகுந்தலா இதை மீட்டுத்தரக்கேட்டு நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, போலீஸார் மீட்டுத் தருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இவ்விவகாரத்தில் ரமேஷைக்கு கொலைமிரட்டல் விடுத்த வினோத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஏனோ இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை,.
அதேநேரம், ராட்டினத்தை இழந்து நிர்கதியாக நிற்கும் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரிலும் சி.எஸ்.ஆர் மட்டுமே பதியப்பட்டுள்ளது. நாகப்பட்டிணத்தில் இருந்துவந்து நேசமணிநகர் காவல் நிலையத்தில் நீதி கிடைக்கும் என காத்திருக்கிறார் சகுந்தலா. ஆனால் காவல்துறையின் விசாரணையோ ஒருதலைபட்சமாக இருப்பதாக சந்தேகம் அடைந்து யாரோ வாங்கிய கடனுக்காக தன் ராட்டினத்தை இழந்து நிற்கும் பெண் சகுந்தலாவுக்கு தொடர் மிரட்டல்களும் வருகிறது. ஒரு பெண்ணுக்கு கொடுத்திருக்கும் மன உலைச்சலுக்கும், அவர் தொழில் முடக்கத்திற்கும், வாழ்வாதாரம் இழப்பிற்கும் காரணமானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ராட்டினத்தையும் அவரிடம் மீட்டு ஒப்படைக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தடைசெய்யப்பட்ட கந்து வட்டித் தொழிலை பகிரங்கமாக செய்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகள் போல் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு, கந்துவட்டித் தொழில் செய்யும் வினோத் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நேசமணிநகர் போலீஸார் இவ்விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால் சகுந்தலாவுக்கு நீதிகேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி களமாடும்.” என மாநகர மாவட்ட தலைவர் அல் காலித் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.