கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த நான்கு வயது பெண் குழந்தையை கண்ட பாலாஜி என்பவர் அந்த குழந்தையை மீட்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பழக்கடை அருகே நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண் குழந்தை பின்பு சாலையை கடந்து இங்கும் அங்குமாக சென்று கொண்டிருப்பதை நான்கு வழிச்சாலையில் கடை வைத்து நடத்தி வரும் பாலாஜி என்பவர் கவனித்துள்ளார். குழந்தையுடன் பெற்றோர் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் சாலையில் திரிவதை கண்ட பாலாஜி அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு விபரம் கேட்டுள்ளார். குழந்தையால் தான் வசிக்கும் இருப்பிடம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காத நிலையில் குழந்தைதனமாக இருந்ததை அறிந்த பாலாஜி அக்குழந்தைக்கு உணவு ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து பின்பு போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குழந்தை எங்கிருந்து வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வந்த நிலையில், குழந்தையை டிவிஎஸ் 50 வாகனத்தில் அழைத்து வந்த முதியவர் ஒருவர் குழந்தையை விட்டு சென்றது சிசிடிவி காட்சியில் தெரிய வந்தது. இதையடுத்து முதியவரை கண்டுபிடித்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, முதியவர் ரகுபதியிடம் விசாரித்தபோது, குழந்தை பெயர் குணஶ்ரீ (4) என்பதும், சூளகிரியில் வசித்து வரும் தம்பி ராகவன்-சாவித்திரி குழந்தையை வீட்டிற்கு விருந்தாளியாக அழைத்து வந்ததும், குழந்தைக்கு பழங்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை அவ்விடத்தை விட்டு நடந்து சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து சூளகிரியில் உள்ள பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் குழந்தை பேசியதையடுத்து போலீசார் குழந்தையை அவரது பெரியப்பா ரகுபதியிடம் ஒப்படைத்தனர்.